அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


அருணாசலேஸ்வரர் கோவிலில்  திருக்கல்யாண உற்சவம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பங்குனி உத்திரம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் இன்று நடந்தது.

விழாவையொட்டி கோவில் மூலவர் சன்னதியில் மதியம் 12 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உற்சவருக்கு திருக்கல்யாணம்

முன்னதாக காலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் இருந்து காவடி எடுத்து வந்து மாட வீதியை சுற்றி வந்தனர்.

பின்னர் இரவு 8 மணியளவில் கோவில் கொடிமரம் முன்புறம் அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவரும், அம்மனும் திருக்கல்யாண மண்டபத்திற்கு சென்றனர்.

இரவு சுமார் 11 மணிக்கு மேல் கல்யாண மண்டபத்தில் உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு தங்க ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் அருணாசலேஸ்வர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவம்

நாளை (புதன்கிழமை) இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது.

மறுநாள் 7-ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், 8-ந் தேதி காலையில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

9-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாமரைக் குளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும் மாலையில் குமர கோவிலில் மண்டப படியும் நடக்கிறது.

அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story