திருநங்கைகள் தினவிழாவையொட்டி 'கேக்' வெட்டி, மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்


திருநங்கைகள் தினவிழாவையொட்டி கேக் வெட்டி, மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்
x

திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே நடந்த திருநங்கைகள் தினவிழாவில் ‘கேக்’ வெட்டியும், மரக்கன்றுகள் நட்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள், மேள, தாளம் முழங்க உற்சாகமாக நடனமாடினார்கள்.

திருப்பூர்

திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே நடந்த திருநங்கைகள் தினவிழாவில் 'கேக்' வெட்டியும், மரக்கன்றுகள் நட்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள், மேள, தாளம் முழங்க உற்சாகமாக நடனமாடினார்கள்.

திருநங்கைகள் தினவிழா

திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே ஜெயா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 150-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு சிலர் சுயதொழில் செய்து வருவதுடன், பலர் இனிப்பு கார, தின்பண்ட வகைகளை வீட்டிலேயே சொந்தமாக தயார் செய்து விற்பனையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருநங்கைகள் தினவிழா ஜெயாநகர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் பிளாக் எண் 2-ல் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் திவ்யா தலைமை தாங்கினார்.

செயலாளர் லட்சுமி, பொருளாளர் தர்ஷனா, துணைத்தலைவர் சித்ரா, துணைச்செயலாளர் தர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

'கேக்' வெட்டி கொண்டாட்டம்

விழாவையொட்டி திருநங்கைகள் 'கேக்' வெட்டியும், தாங்கள் சொந்தமாக தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகளை அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவின் போது நாதஸ்வர மேள, தாளம் முழங்க திருநங்கைகள் ஆடல், பாடலுடன் நடனமாடியதுடன், குலவை சத்தமிட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகா, ரூபினி, துர்கா, மோனிகா, சவுந்தர்யா, பவானி, கௌரி உள்பட 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் புத்தாடை அணிந்து உற்சாகமாக பங்கேற்றனர்.

வணிக வளாகத்தில் கடை

முடிவில் சங்கத் தலைவர் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

150-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இங்கு ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். இதில் பலர் பட்டதாரிகளாக உள்ள நிலையில் நாங்கள் சுயதொழில் செய்து, சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் இனிப்பு மற்றும் கார தின்பண்ட வகைகளை நாங்களே தயாரித்து கண்காட்சி, பொருட்காட்சிகளில் விற்பனைக்கு வைக்கிறோம். மேலும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலமாகவும் எங்களது தயாரிப்புகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

எங்களது சுய தொழிலை ஊக்கப்படுத்தும் வகையிலும், எங்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும் எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யவும், சந்தைப்படுத்தவும் திருப்பூரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களில் எங்களுக்கு கடை ஒதுக்க தமிழக முதல்-அமைச்சர், திருப்பூர் எம்.எல்.ஏ.க்கள்,மேயர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் எங்களுக்கு கடைகள் ஒதுக்கி நாங்கள் தொழில் செய்யும் போது சமுதாயத்தில் எங்களுக்கு தனி அங்கீகாரம்,மரியாதையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story