திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரூ.26¾ லட்சம் உண்டியல் காணிக்கை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.26 லட்சத்து 79 ஆயிரத்து 122 வருமானம் கிடைத்துள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.26 லட்சத்து 79 ஆயிரத்து 122 வருமானம் கிடைத்துள்ளது.
உண்டியல்கள் திறப்பு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பணம், காசு, மற்றும் வெள்ளி பொருட்கள், தங்க பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். இந்த வகையில் உண்டியல்கள் நிரம்பியதும் மாதந்தோறும் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ், கள்ளழகர் திருக்கோவில் துணை கமிஷனர் மு.ராமசாமி ஆகியோர் மேற்பார்வையில் இந்த மாதத்திற்கான உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் ஊழியர்கள், ஸ்ரீஸ்கந்தகுருவித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.26¾ லட்சம் வருமானம்
அதில் ரொக்க பணம் ரூ.26 லட்சத்து 79 ஆயிரத்து 122 இருந்தது. மேலும் 183 கிராம் தங்கமும், 1 கிலோ 940 கிராம் வெள்ளியும் கிடைத்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் தக்கார் பிரதிநிதியாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கண்காணிப்பாளர் ஆறுமுகம், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வர் இளவரசி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் அ.சுமதி, ஜெ.சத்தியசீலன், அலுவலக கண்காணிப்பாளர் ரஞ்சனி, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் அலுவலக பேஷ்கார்கள் புகழேந்தி, நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.