திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்ஒரே மாதத்தில் 5 ஆடி விசேஷ விழாக்கள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடி மாதத்தில் மட்டும் 5 விசேஷ விழாக்கள் நடக்கிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடி மாதத்தில் மட்டும் 5 விசேஷ விழாக்கள் நடக்கிறது.
ஆடி கார்த்திகை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் அம்மனுக்கு உகந்தஆடி மாதத்தில் மட்டும் 5 விழாக்கள் நடைபெறுவது தனி சிறப்பாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினத்தன்று தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் ஆடி மாத கார்த்திகை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி கார்த்திகைக்கு என்று சன்னதி தெருவில் தனி மண்டபமே உள்ளது., ஆண்டுதோறும் ஆடி கார்த்திகை அன்று இந்த மண்டபத்தில்தான் காலை முதல் இரவு வரை தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். பின்னர் வழக்கம் போல தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி நகர் உலா வருவார். இந்த ஆண்டு ஆடிக்கார்த்திகை அடுத்த மாதம் ஆகஸ்டு (ஆடி 24-ந் தேதி) 9-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரம்
இந்தகோவிலை பொறுத்தவரை அம்மனுக்கு உகந்த ஆடிப்பூரம், ஐப்பசி பூரம் என்று ஆண்டுக்கு 2 முறை பூர விழா நடைபெற்று வருகிறது. ஐப்பசி பூரத்தில் தெய்வானை அம்பாளும், ஆடிப்பூரத்தில் கோவர்த்தனாம்பிகையும் எழுந்தருளுவார். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரம் வருகின்ற 21-ந்தேதி முதல் நடக்கிறது. மாதந்தோறும் பவுர்ணமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.
இதேசமயம் ஆடி மாதத்தில் காவல் தெய்வமான கருப்பண்ணசுவாமிக்கு சந்தனம் சாத்திப்படியும், வண்ணமலர்களால் பந்தல்அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடைபெறும். இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டிற்கான ஆடி பவுர்ணமி பூஜை வருகின்ற 1-ந்தேதி நடக்கிறது.
1008 திருவிளக்குபூஜை
ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நலனுக்காக 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை வருகின்ற 11-ந்தேதி நடக்கிறது. எனவே ஆடி மாதத்தில் வருகின்ற 21-ந்தேதி ஆடிப்பூரம், 1-ந் தேதி ஆடி பவுர்ணமி, 9-ந்தேதி ஆடிக் கார்த்திகை, 11-ந்தேதி ஆடிவெள்ளி 1008 திருவிளக்குபூஜை, 16-ந்தேதி ஆடி அமாவாசை என்று 5 விழாக்கள் நடக்கிறது.
தமிழ் மாத கணக்கின்படி மாதத்திற்கு ஒரு அமாவாசை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதாவது ஆடி மாதத்தின் முதல் நாளான வருகின்ற 17-ந்தேதி முதல்அமாவாசையும், ஆடி மாதத்திலேயே (ஆகஸ்டு16-ந்தேதி) 2-வது அமாவாசையும் வருகிறது. ஆங்கில மாதத்தை பொறுத்தவரை வெவ்வேறு மாதமாக இருப்பினும் தமிழ் மாதத்தை ஒப்பிடும் போதுஒரே மாதமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் முருகன்கோவிலை பொறுத்தவரை ஆகஸ்டு 16-ந் தேதி அமாவாசையை விழா கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.