பணம் கட்டி 16 ஆண்டுகள் தரிசனத்துக்காக காத்திருப்பு: சேலம் பக்தருக்கு, திருப்பதி தேவஸ்தானம் ரூ.45 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


பணம் கட்டி 16 ஆண்டுகள் தரிசனத்துக்காக காத்திருப்பு: சேலம் பக்தருக்கு, திருப்பதி தேவஸ்தானம் ரூ.45 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்-நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

பணம் கட்டி 16 ஆண்டுகள் தரிசனத்துக்காக காத்திருக்கும் சேலம் பக்தருக்கு ரூ.45 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்துக்கு சேலம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சேலம்

திருப்பதி தரிசனம்

சேலம் அழகாபுரம் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் ஹரிபாஸ்கர். இவர், 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், மேல்சாத்து வஸ்திர சேவையை பார்க்க 2 பேருக்கு ரூ.12,250-ஐ கட்டி பதிவு செய்துள்ளார். அப்போது, 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந் தேதி தரிசனம் செய்வதற்கு தேதி ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக ஹரிபாஸ்கருக்கு தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக வேறு தேதியில் அனுமதி வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு

இந்த நிலையில், மேல்சாத்து வஸ்திர சேவை தரிசனம் இல்லை என்றும், வேறு பிரேக் தரிசன தேதி தரப்படும் என்றும் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் பணம் கட்டி 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தரிசனத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் சேவை குறைபாடு உள்ளதாக சேலம் நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் செல்வகீதன் மூலம் பாதிக்கப்பட்ட ஹரிபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.45 லட்சம் நஷ்டஈடு

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்து வஸ்திர சேவையை தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சேவை குறைபாடு மற்றும் மனுதாரரின் மன உளைச்சலுக்காக ரூ.45 லட்சம் நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும். மேலும், தரிசனத்துக்காக கட்டிய தொகையை 6 சதவீத வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என தீர்ப்பளித்தது.

சேலம் நுகர்வோர் கோர்ட்டின் தீர்ப்பு நகல் திருப்பதி தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மீதான சேலம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story