திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாகா திடீர் மாற்றம்


திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாகா திடீர் மாற்றம்
x

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாகா திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். அந்த திட்டத்தின் கீழ், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்கு சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

அந்த வகையில் கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்தார்.

சட்டம்-ஒழுங்கு ஆய்வு

சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார்.

கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 4 மாவட்ட கலெக்டர்கள் பங்குபெற்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் விரிவான ஆய்வை நடத்தினார்.

கலெக்டர் மாற்றம்

முதல்-அமைச்சர் அந்த மாவட்டங்களில் ஆய்வை முடித்து சென்னைக்கு திரும்பியுள்ள நிலையில் நேற்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக பாதுகாப்பு இயக்குநர் எஸ்.வளர்மதி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை கலெக்டர் டி.பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாகா, சமூக பாதுகாப்பு இயக்குநராக மாற்றப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story