தமிழ்நாட்டில் சிறந்த ஊர்க்காவல் படையாக திருப்பத்தூர் மாவட்டம் விளங்க வேண்டும்


தமிழ்நாட்டில் சிறந்த ஊர்க்காவல் படையாக திருப்பத்தூர் மாவட்டம் விளங்க வேண்டும்
x

தமிழ்நாட்டில் சிறந்த ஊர்க்காவல் படையாக திருப்பத்தூர் மாவட்டம் விளங்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பேசினார்.

திருப்பத்தூர்

இணைப்பு விழா

திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆண்டு விழா மற்றும் புதிய ஊர்க்காவல் படை வீரர்கள் இணைப்பு விழா ஜோலார்பேட்டை சாலை நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

வேலூர் சரக படைத்தளபதி வி.என்.டி.சுரேஷ் தலைமை தாங்கி பேசினார். திருப்பத்தூர் மாவட்ட படைத்தளபதி என்.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்க்காவல் படையினருக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்களில் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட 3 பேருக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தன்னார்வ படை

ஊர்க்காவல் படை என்பது இந்தியக் காவல்துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வ படையாகும். 18 முதல் 50 வயது வரை தன்னார்வம் கொண்ட அனைத்து தரப்பு இளைஞர்கள் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஊர்க்காவல் படையில் குறைந்தபட்ச சேவைக்காலம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்தியாவின் 25 மாநிலங்களில் ஊர்க்காவல் படையில் 5,73,793 நபர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. காவல்துறையில் போலீசார் வலது கை என்றால் இடது கையாக ஊர்க்காவல் படையினர் உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 144 ஊர்க்காவல் படையினர் பணிபுரிகின்றனர். இதை அதிகரிக்க வேண்டும் என்று நான் பொறுப்பேற்ற போதே தெரிவித்திருக்கிறேன். விரைவில் ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிறந்த மாவட்டமாக...

ஊர்க்காவல் படையில் பணிபுரிபவர்கள் பல்வேறு திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். அவ்வாறு உள்ளவர்கள் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக நமது மாவட்டத்தில் விளையாட்டு போட்டியில் வெற்றி அடைய வேண்டும். 2024-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சிறந்த ஊர்க்காவல் படை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என விளங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (ஆம்பூர்), விஜயகுமார் (வாணியம்பாடி), செந்தில் (திருப்பத்தூர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் மாவட்ட துணை படை தளபதி சத்தியபாலாஜி நன்றி கூறினார். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.


Next Story