திருப்புல்லாணி, ஆணைகுடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு


திருப்புல்லாணி, ஆணைகுடியில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து காணப்படும் வெயிலின் தாக்கத்தால் திருப்புல்லாணி, ஆணைகுடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம்


வெயிலின் தாக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, ஆணைகுடி, கோப்பேரி மடம், உப்பூர், திருப்பாலைக்குடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் உப்பு உற்பத்தி சீசன் செப்டம்பர் மாத இறுதியுடன் முடிவடைந்து விடும்.

இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கம் கடந்த 7 மாதத்திற்கு மேலாக இடைவிடாமல் தொடர்ந்து இருந்து வருகின்றது. தற்போது வரை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் திருப்புல்லாணி, திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள ஆணைகுடி உள்ளிட்ட ஊர்களில் உப்பள பாத்திகளில் உப்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.

உப்பு உற்பத்தி அதிகரிப்பு

தொடர்ந்து இருக்கும் வெயிலின் தாக்கத்தால் பாத்திகளில் கல் உப்பு விளைச்சல் இந்த ஆண்டு அதிகமாக உற்பத்தியாகி வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் கல் உப்புகள் லாரி மூலம் தூத்துக்குடியில் உள்ள கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு எந்திரம் மூலம் கல் உப்புகள் அரைக்கப்பட்டு 1 கிலோ பாக்கெட்டுகளாகவும் பேக்கிங் செய்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு டன் உப்பு 2 ஆயிரத்திற்கு விலை போவதாகவும் கூறப்படுகின்றது. கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தொடர்ந்து காணப்படும் வெயிலின் தாக்கத்தால் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உப்பு உற்பத்தியை நம்பி வாழும் ஏராளமான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story