பாபநாசம், ராஜவல்லிபுரம் கோவில்களில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
பாபநாசம், ராஜவல்லிபுரம் கோவில்களில் திருவாதிரை திருவிழா நேற்று ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதேபோல் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாசர் கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி போத்தி செல்வி, கோவில் மணியம் செந்தில் மற்றும் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். வருகிற 6-ந் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.