வாகனம் நிறுத்த இடம் இல்லாமல் தத்தளிக்கும் திருவண்ணாமலை நகரம்
வாகனம் நிறுத்தும் இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகனம் நிறுத்தும் இடம் இல்லாததால் திருவண்ணாமலை நகர மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்மிக ஸ்தலம்
தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் திருவண்ணாமலையும் ஒன்று. இது சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலையை சுற்றியுள்ள பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தினமும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தருகின்றனர். சமீப நாட்களாக அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். திருவண்ணாமலை நகரம் சுற்றுலா நகரம் மட்டுமின்றி சிறப்பு வாய்ந்த ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்குகிறது.
நகரின் மையப்பகுதி
திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியாக திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து ரவுண்டா பகுதி, சின்னக்கடை வீதி, தேரடி வீதி, கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர வீதி உள்ளது. இந்த பகுதியில் தான் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கடைகள் உள்ளன. மேலும் சிறியது முதல் பெரிய அளவிலான துணிக்கடைகள், நகைக்கடைகள், தேசிய மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன.
அதனால் தினமும் இந்த பகுதிகளில் மக்களின் கூட்டமும் அதிகமாகவே காணப்படும். மேலும் கடலைக்கடை மூலை சந்திப்பு பகுதியில் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உள்ளதால் காலை நேரங்களில் விவசாயிகள் மற்றும் மக்கள் கூட்டம் காணப்படும். விழா காலங்களில் இந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
வாகனங்கள் நிறுத்துமிடம்
குறிப்பாக இந்த பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். பெரும்பாலும் கடைகளின் முன்பு கடைக்காரர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் சாலையில் செல்லும் பொதுமக்கள் திடீரென ஒரு அவசரத்திற்கு வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
காலை முதல் இரவு வரை தேரடி வீதியில் இருந்து கடலை கடை மூலை சந்திப்பு வரையும், உடுப்பி ஓட்டல் செல்லும் சந்து பகுதியிலும், ஆணைக்கட்டி தெருவிற்கு செல்லும் பகுதிகளிலும், ஜோதி பூ மார்க்கெட் அருகிலும், சன்னதி தெரு பகுதியிலும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றபடியே உள்ளது. மேலும் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையம் எதிர் புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது.
நடைபாதை ஆக்கிரமிப்பு
இதனால் கடை வீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். உள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அருகில் தெரிந்தவர்கள் இடத்தில் காரை விட்டு வந்து விடுகின்றனர். ஆனால் வெளியூர்களில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நகரின் வெளி பகுதியில் விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
காந்தி நகர் பைபாசில் உள்ள மைதானம், ஈசான்ய மைதானத்தில் அல்லது கிரிவலப்பாதையில் விட்டு, விட்டு நகரத்திற்கு வருகின்றனர். மேற்குறிப்பிட்ட இடங்களில் உள்ள நடைபாதைகள் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் ஒருபுறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நடக்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே இதுகுறித்து திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு திருவண்ணாமலை நகரில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.