திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி
பங்குனி உத்திர விழாவையொட்டி திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார்.
பங்குனி உத்திர விழாவையொட்டி திருவண்ணாமலை தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்தார்.
பக்தர்கள் கூட்டம்
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 5-ந் தேதி காலையில் தொடங்கி 6-ந் தேதி காலையில் நிறைவடைந்தது. பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி செய்தனர்.
தொடர்ந்து 7-ந் தேதி முதல் இன்று வரை 3 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதாலும் இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில் தீபத் திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
விழாவையொட்டி கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாசினம் செய்தனர்.
அன்று இரவு கோவில் கொடிமரம் முன்பு அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து கல்யாண மண்டபத்தில் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பாலிகை விடுதல் நிகழ்ச்சி
கடந்த 6-ந் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் நலங்கு உற்சவம், திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமமும், இரவு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. அதைதொடர்ந்து இன்று விழா நிறைவாக மதியம் சுமார் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்கரத்தில் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் திருக்கல்யாணத்தின் போது வைக்கப்பட்ட முளைத்த நவதானியங்களை குளக்கரையில் உள்ள தொட்டியில் கரைத்து குளத்தில் விட்டனர்.
பின்னர் தாமரை குளம் ராஜா மண்டபத்தில் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் அங்கிருந்து கோவிலுக்கு சாமி புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து குமரக்கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.