திறந்தவெளி பாராக மாறி வரும் திருவாரூர்-மன்னார்குடி சாலை


திறந்தவெளி பாராக மாறி வரும் திருவாரூர்-மன்னார்குடி சாலை
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளமல் பகுதியில் திருவாரூர்-மன்னார்குடி சாலை திறந்த வெளி பாராக மாறி வருகிறது. இதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

விளமல் பகுதியில் திருவாரூர்-மன்னார்குடி சாலை திறந்த வெளி பாராக மாறி வருகிறது. இதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

போக்குவரத்து நிறைந்த பகுதி

திருவாரூரில் இருந்து மன்னார்குடி, தஞ்சை செல்லும் வழியில் விளமல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம், தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட ஏராளமான நிறுவனங்கள், கல்வி நிலையங்களும் உள்ளன. இதனால் இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

மேலும் அந்த பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தில் பொதுமக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் எப்போதும் போக்குவரத்து போலீசார் ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திறந்தவெளி பாராக மாறியது

இவ்வாறு பொதுமக்கள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. திருவாரூர் -மன்னார்குடி சாலையோரத்தில் உள்ள கடைகளின் முன்பு இரவு 7 மணிக்கு பிறகு ஏராளமானோர் அமர்ந்து மது குடித்த வண்ணம் உள்ளனர்.

இரவு 12 மணி வரை இந்த நிலை நீடிக்கிறது. மதுகுடித்து விட்டு பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் இரவு 10 மணிக்குப்பிறகு பார்த்தால் காலி மதுபான பாட்டில்களும், பிளாஸ்டிக் தம்ளர்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த இடத்தை பார்த்ததால் திறந்த வெளி பார் போன்று காட்சி அளிக்கிறது.

தகராறு

காலை நேரத்தில் பாட்டில்களை சேமிக்க வருபவர்கள் காலி மதுபான பாட்டில்கள், குடிநீர் பாட்டில்களை எடுத்துச்சென்று விடுகின்றனர். மீதமுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். தூய்மை பணியாளர்கள் தான் சுத்தம் செய்யும் நிலை உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள், வெளியூரில் இருந்து திருவாரூர், விளமல் பகுதிக்கு வருபவர்கள் என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் கடைகளின் முன்பு மதுபிரியர்கள் வரிசையாக அமர்ந்து மது குடிப்பதால், அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். சில நேரங்களில் மதுபிரியர்கள் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதுடன், ஆபாச வார்த்தைகளால் பேசி வருகின்றனா். மதுகுடித்து விட்டு செல்லும் மதுபிரியர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர்

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதே போல் திருவாரூரை அடுத்த கங்களாஞ்சேரி பகுதியில் உள்ள வெட்டாறு பிரிவு பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்தி வருகின்றனர். இந்த தடுப்பணை திறந்த வெளிபாராக மாறி உள்ளது.

எனவே மதுபிரியர்களின் அட்டகாசத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story