திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைப்பு
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.
`தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.
உலக புகழ்பெற்ற ஆழித்தேர்
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் நடக்கும் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.
மேற்கூரை
தேரோட்டத்திற்கு பின்னர் இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை மூலம் தேரை மூடுவது வழக்கம். இதனால் பிரமாண்டமான ஆழித்தேரின் அழகிய தோற்றத்தை சாதாரண நாட்களில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் போனது.இதனால் இந்த ஆழித்தேரை எந்த நேரத்திலும் அனைவரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது.
அம்பாள் தேரோட்டம்
இந்தநிலையில் இந்த ஆண்டு தேரோட்டம், கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி நடைபெற்றது. இதனையடுத்து ஆடிப்பூர விழாவன்று அம்பாள் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர், ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும்.இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து இழுத்து செல்லும்போது இடையூறாக அமையும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் உரசினால் எளிதாக சேதமடையும் நிலையும் உருவானது. இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதியாக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளால் மூடப்பட்டது. இதனையடுத்து ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.
கண்ணாடி கூண்டு
இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. இதில் மேற்பகுதி கூரை அமைக்கப்பட்ட நிலையில் நான்கு புறங்களில் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் இருந்தது. இதனால், தற்போது பெய்து வரும் மழையினால் தேர் நனைந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேர் மழையில் நனையாமல் பாதுகாத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து `தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று நிறைவு பெற்றது.
ஒருபகுதியில் இரும்புத்தகடு
இருந்தபோதிலும் கண்ணாடி கூண்டு ஒரு பகுதிக்கு மட்டும் அமைக்கப்படாமல் பழைய முறையில் இரும்பு தகடு கொண்டு மூடப்பட்டுள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளும் கலர் மங்கி ஆழித்தேரை வெளியில் இருந்து சரிவர பார்க்க முடியாத நிலையே இருந்து வருகிறது.ஆகவே, வரலாற்று சிறப்புமிக்க ஆழித்தேரை பாதுகாத்திட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.