திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில்குருப்பெயர்ச்சி விழா


திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில்குருப்பெயர்ச்சி விழா
x

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பிரவேசித்ததையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் பிரவேசித்ததையொட்டி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழா

தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற இந்த கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், சுயம்புவாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரும் கொண்டவர்.

பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியையே குருவாக பாவித்து வழிபடப்படுகிறது. ஆனால் திட்டை கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு குருபகவான் அருள்பாலித்து வருகிறார்.

குருபார்க்க கோடி நன்மை

குருபகவான் ஒரு முழு சுககிரகம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் மிக கடுமையான பாவங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தால் காப்பாற்றும் சக்தியாக குருபகவான் விளங்குகிறார். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்பதும், குரு பார்க்க தோஷம் விலகும் என்பதும் பழமொழிகள் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவார். அப்போது திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.21 மணிக்கு குருபகவான் பிரவேசித்தார். இந்த நிகழ்ச்சியில் வசிஷ்டேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் ஆசைத்தம்பி மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்

குருப்பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தாலும் நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். நேரம், ஆக, ஆக பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. குருப்பெயர்ச்சி விழாவுக்காக திட்டைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

பரிகார ஹோமம்

குருப்பெயர்ச்சியையொட்டி வருகிற 1-ந் தேதி(திங்கட்கிழமை) லட்சார்ச்சனையும், 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடக்கிறது.


Next Story