வக்பு வாரிய சொத்துகள் குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்- பவானியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி


வக்பு வாரிய சொத்துகள் குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்- பவானியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
x

வக்பு வாரிய சொத்துகள் குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்- பவானியில் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

ஈரோடு

பவானி

வக்பு வாரிய சொத்துகள் குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்று பவானியில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

உதவித்தொகை

பவானியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவி தொகையினை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு உதவித்தொகையை வழங்க மறுக்கும் நிலை ஏற்பட்டால் தமிழக அரசே கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனை தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

சிவில் சட்டம்

மேலும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான சொத்துகள் தமிழகத்தில் எங்கெங்கே உள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வக்பு வாரியத்திற்கு சொந்தமில்லாத சில இடங்களும் அந்த வாரியத்திற்கு சொந்தம் என தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும்.

மத்திய அரசின் பொது சிவில் சட்டம் அனைவரையும் பாதிக்கும் சட்டமாக உள்ளது. எனவே மத்திய அரசு இதனை அமல்படுத்தக் கூடாது.

இவ்வாறு ஜவாஜிருல்லலா கூறினார்.

கட்சி கொடியேற்று விழா

பவானி லட்சுமி நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி நகர் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

விழாவுக்கு கட்சியின் பவானி நகர தலைவர் டி.எஸ்.சிராஜுதீன் தலைமை தாங்கினார்.

கட்சியின் தலைமை பிரதிநிதியும், ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான கோவை அக்பர் அலி, மாநில தொண்டர் அணி செயலாளர் பவானி எஸ்.முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் உசேன், தலைமை பிரதிநிதி முஜிபுர் ரஹ்மான் உமரி, மாவட்ட பொருளாளர் எஸ்.செய்யது அன்வர் ஆடிட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெயர் பலகை திறப்பு

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து பெயர் பலகையினை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பவானி ரிபாத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் அலி, நகரத் தலைவர் டி.எஸ்.சிராஜுதீன், த.மு.மு.க. நகர செயலாளர் ரபீக், ம.ம.க. நகர செயலாளர் முகமது அன்சாரி, நகர பொருளாளர் அப்துல் வாஹித், நகர மருத்துவமனை செயலாளர் தவுலத், மர்ஜுக் அகமது, பவானி சுன்னத் ஜமாத் சார்பாக அதன் செயலாளர் ஹாஜி முகமது முபாரக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜவாஹிருல்லாவுக்கு பவானி ஜமுக்காளம் வழங்கப்பட்டு மேள தாளங்கள் வழங்க வரவேற்க அளிக்கப்பட்டது.


Next Story