டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 60,591 பேர் எழுதினர்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 60,591 பேர் எழுதினர்
தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் 60,591 பேர் தேர்வு எழுதினர். 7,137 பேர் தேர்வு எழுதவில்லை.
குரூப்-4 தேர்வு
தமிழகஅரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், வரிதண்டலர் போன்ற பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கு 21 லட்சத்து 85 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7,689 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது.
60,591 பேர் எழுதினர்
இந்த தேர்வை எழுத 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டனர். இவர்களில் 60 ஆயிரத்து 591 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதாவது 89.46 சதவீதம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். பல்வேறு காரணங்களால் 7 ஆயிரத்து 137 பேர் தேர்வு எழுதவில்லை.
இந்த தேர்வு எழுத 10-ம் வகுப்பு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும் பட்டப்படிப்பு முதல் என்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள் வரை பலர் ஆர்வத்துடன் வந்து தேர்வு எழுதினர். ஹால்டிக்கெட்டுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்றனர். காலை 9 மணி வரை தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அதிகாரிகள் அனுமதித்தனர். அதன்பிறகு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
மின் சாதனங்களுக்கு தடை
தேர்வு மையத்தில் வினாத்தாள் 9.15 மணிக்கு தேர்வு எழுத வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி, பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. எழுத்துத்தேர்வில் பிரிவு 1-ல் கட்டாய தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. பி பிரிவில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும் என 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
ஒரு கேள்விக்கு 1½ மதிப்பெண் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், வாட்சு உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் ஒரு தேர்வு மையத்திற்கு 2 போலீசார் வீதம் 478 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்பாக்கி ஏந்திய 55 ஆயுதப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு எழுத வருபவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன