டி.என்.பி.எஸ்.சி. மூலம் ரேஷன் கடை பணியாளர்கள் நியமனம்: அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
டி.என்.பி.எஸ்.சி. மூலம் ரேஷன் கடை பணியாளர்கள் நியமனம்: அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4 ஆயிரம் பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத்துறை முடிவு செய்திருக்கிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட அளவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த நியமனங்கள் சரியாக நடக்குமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில், அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியின்போது ரேஷன் கடை ஊழியர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடந்தபோது, அதை பா.ம.க. கடுமையாக எதிர்த்தது. ஒரு கட்டத்தில் அந்த ஆள் தேர்வு கைவிடப்பட்டது.
இப்போது நீண்ட காலத்திற்கு பிறகு ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான நடைமுறை ஐயத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தால் தான் ஏழை இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு, ரேஷன் பணியாளர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நேர்காணலின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். சம வாய்ப்பையும், சமூகநீதியையும் உறுதிசெய்யும் வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் ரேஷன் கடை பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.