டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு: செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி இல்லை


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு:  செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி இல்லை
x

குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 240 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 240 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்கள் செல்போன், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

71,452 பேர் தேர்வு எழுதுகிறார்கள்

குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- 4 (டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது மாவட்டம் முழுவதும் 194 கல்வி நிலையங்களில் அமைந்துள்ள 240 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

தேர்வை குமரி மாவட்டத்தில 71,452 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக 15 பறக்கும் படைகள், 48 இயக்க வாகனங்கள் மற்றும் 240 ஆய்வு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 240 மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பதிவு

இந்த தேர்வுக் கூடங்களில் 240 வீடியோகிராபர்கள் மூலம் தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் இருக்கவேண்டும். காலை 9 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அனுமதிக்கும் உபகரணங்களான கருப்பு நிற பந்து முனை பேனா மற்றும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும். செல்போன், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

இத்தகவல் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டிக்கர் ஒட்டும் பணி

இந்தநிலையில் அனைத்து தேர்வு மையங்களிலும் உள்ள தேர்வு அறைகளில் தேர்வர்களின் வரிசை எண்கள் ஒட்டும் பணி நேற்று நடந்தது. நாகர்கோவில் கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் ஆசிரியர்கள் தேர்வர்களின் எண்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story