ரெயிலில் பெண் பயணியிடம் 5½ பவுன் நகை-பணம் திருட்டு
நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் பெண் பயணியிடம் 5½ பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் பெண் பயணியிடம் 5½ பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ரெயில் பயணி
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி ஏஞ்சல் (வயது 40). இவர் தனது 10 வயது மகள் மற்றும் தாயாருடன் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார்.
அந்த ரெயில் நேற்று காலை வள்ளியூர் ரெயில் நிலையம் வந்தபோது தான் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில் 5½ பவுன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன், ரூ.2500 ரொக்கம், ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஞ்சல் அந்த கைப்பையை ரெயில் பெட்டி முழுவதும் தேடினார். ஆனால் அது கிடைக்கவில்லை.
ரூ.2 லட்சம்
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்ததும், நாகர்கோவில் ரெயில்வே போலீசில் ஏஞ்சல் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார். திருட்டுப் போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.