வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடையமாணவிகள் எந்த சூழலிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது: போலீஸ சூப்பிரண்டு


வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடையமாணவிகள் எந்த சூழலிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது: போலீஸ சூப்பிரண்டு
x

வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைய மாணவிகள் எந்த சூழலிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது என்று போலீஸ சூப்பிரண்டுபாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை அடைய மாணவிகள் எந்த சூழலிலும் கல்வி கற்பதை நிறுத்தக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.

போதை பொருள் தடுப்பு குழு

தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி தாளாளர் இரா.முத்துசெல்வம் தலைமை தாங்கினார். முதல்வர் எம்.வான்மதி முன்னிலை வகித்தார். மாணவி அகமது ரஜப்நிஷா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு, மாணவி கே.அனுசியா வடிவமைத்த சங்கத்துக்கான சின்னத்தை வெளியிட்டு பேசினார்.

அப்போது, தற்போது இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால், அதற்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து கொள்கின்றனர். இதனால் தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இங்கு உருவாக்கப்பட்டுள்ள போதை பொருள் தடுப்பு குழுவினராகிய நீங்கள் உங்கள் உறவினர்கள், உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் போதை பொருள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கஞ்சா போன்ற போதை பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தருவதற்காக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்போன் எண்ணான 83000 14567 என்ற எண்ணுக்கும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இலக்கு

நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில கட்டுபாடுகள் நமக்கு அவசியம். விளையாட்டுகளுக்கு எப்படி விதிமுறைகள், எல்லைகள் மற்றும் வெற்றி இலக்குகள் உள்ளதோ அதே போன்றும் வாழ்க்கையிலும் உங்களுக்கென்று கட்டுபாடுகளை உருவாக்கி கொண்டு உங்கள் இலக்குகளை அடைய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனமும் ஆரோக்கியமாக இருக்கும். தங்களிடம் இருப்பதை வைத்து வாழ பழகிகொண்டாலே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், எண்ணமே வாழ்க்கை. கோபத்தினால் ஒருவன் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்வதைவிட தன்னை கட்டுபடுத்தி பிறரிடம் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன். நல்ல எண்ணங்களை உருவாக்கி கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்த கூடாது. தேவையில்லாத அகங்காரம், தற்பெருமை, கோபம் போன்றவற்றை தூக்கி எறியுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையில் உங்கள் லட்சியம் மிக உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

உறுதிமொழி ஏற்பு

தொடர்ந்து மாணவிகள் போதை ஒழிப்பு குறித்த உறுதி மொழி ஏற்றனர். விழாவில் திரளான மாணவிகள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாணவி எம்.காயத்ரி தொகுத்து வழங்கினார். மாணவி சுவேதா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் சசிரேகா மணி தலைமையில் மாணவிகள் செய்து இருந்தனர்.


Next Story