ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாகர்கோவில் உள்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாகர்கோவில் உள்பட 5 இடங்களில் இருந்துசிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு 6-ந் தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.
கணபதி ஹோமம், உச்சபூஜை, அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடந்தன. திருவம்பாடி கிருஷ்ணன், குலசேகர பெருமாள் சன்னிதிகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மதியம் திருவட்டார் என்.எஸ். கரையோகத்தினரின் பாகவத பாராயணம், மாலையில் ஹரே கிருஷ்ணா ராம நாம சங்கீர்த்தனம், இரவு டாக்டர் பிந்து லெட்சுமியின் கிருஷ்ணகதா நடனம் ஆகியவை நடந்தது.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு
கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. அதைத்தொடர்ந்து நெல்லை சேசப்பன் சாமி குழுவினரின் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெற்றது.
ரூ.5.70 லட்சம் செலவில் வெள்ளியில் செய்யப்பட்ட ஸ்ரீபலி விக்கிரகத்தை, சென்னையைச்சேர்ந்த விஷ்வ இந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, கோவில் மேலாளர் மோகன்குமாரிடம் ஒப்படைத்தார்.
சிறப்பு பஸ்கள்
கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கலை ஆகிய 5 இடங்களில் இருந்து 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திருவட்டாருக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை காண கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வர உள்ளனர். இதனால் வாகனம் நிறுத்துவதற்காக 7 இடங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
700 போலீசார்
திருவட்டார் எக்செல் பள்ளி வளாகம், சப்பாத்து அருகிலும், ஆற்றூர்.வி.கே.எஸ்.டி. கல்வி நிறுவனம், மரியா கல்லூரி வளாகம், கழுவன் திட்டையில் இருந்து ஆற்றுக்குச்செல்லும் பாதை, , திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி, திருவட்டார் போக்குவரத்துக்கழக பணிமனை ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக வாகனங்கள் வந்தால் புத்தன்கடை புனித வியாகப்பர் ஆலய வளாகம், திருவட்டார் அருணாசலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும்.
கும்பாபிஷேக பாதுகாப்பு பணிக்கு குமரி மாவட்ட போலீஸ் தவிர நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 700 போலீசார் வருகிறார்கள். அவர்கள் 5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் கூறினார்.