முன்மாதிரி விருதுபெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


முன்மாதிரி விருதுபெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2023 1:00 AM IST (Updated: 9 Feb 2023 11:46 AM IST)
t-max-icont-min-icon

முன்மாதிரி விருதுபெற திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, தனது சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கவுரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2022-23-ம் நிதியாண்டில் திருநங்கையர் தினத்தில், திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதானது ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடங்கி வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளான திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கையருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது. இதற்கு வருகிற 28-ந் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடர்பான கையேடு தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும். அந்த கையேட்டில் சுயசரிதை, சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படங்கள், பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவைக்கான விரிவான அறிக்கை போன்றவற்றை கொண்டு உருவாக்க வேண்டும். தமிழில் அச்சு செய்யப்பட்ட அந்த கையேட்டின் 2 நகல்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story