குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
பேரணாம்பட்டில் ெபண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் படுகொலை
பேரணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி வளர்மதி (வயது 50). இவர் நேற்று முன்தினம் தான் வளர்த்து வந்த ஆடுகளை மேய்ச்சலுக்காக வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்துக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் வளர்மதி காதில் அணிந்திருந்த தங்க கம்மல்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனால் வளர்மதி அவர்களிடமிருந்து தப்பி ஓடியிருக்கிறார். ஆனால் மர்ம ஆசாமிகள் அவரை துரத்தி சென்று கத்தியால் கழுத்து, காதுகளை அறுத்து கொலை செய்து, தங்க கம்மல்களை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
சாலை மறியல்
இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதி நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பேரணாம்பட்டு போலீசார், கொலை செய்யப்பட்ட வளர்மதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் கொலை செய்யப்பட்ட வளர்மதியின் உறவினர்கள், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, கோஷங்கள் எழுப்பினர். அப்போது போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடலை வாங்க மறுப்பு
உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், கொலை குற்றவாளிகளை கைது செய்யும்வரை வளர்மதியின் உடலை வாங்கமாட்டோம் என கூறினர்.
அவர்களை சமாதானம் செய்த போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை விசாரணை
இந்த நிலையில் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி பேரணாம்பட்டிற்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் அவரது உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், திருநாவுக்கரசு. பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.