வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெறவிவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யலாம்: கலெக்டர்


தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற, ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேளாண் அடுக்கு திட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் வேளாண்மை துறையால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், வங்கிகணக்கு எண் விவரங்கள் மற்றும் நிலஉரிமை ஆவணங்களுடன் சென்று GRAINS என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யும் போது நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரம் அடிப்படையில் GRAINSஎன்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண்மை - உழவர் நலத்துறை, பேரிடர் மேலாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்புதுறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதைசான்றளிப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.

பதிவு செய்யலாம்

மேலும், GRAINS வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். இது ஒற்றைசாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து துறை சார்ந்த திட்டங்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் அரசின் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் இதுவரை அரசிடம் இருந்து பெற்ற நன்மைகளை முழுமையாக இந்த வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் துறை சார்ந்த திட்டங்களுக்கு விவசாயிகளின் அடிப்படைவிவரங்கள் மற்றும் பயிர் விவரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ற பயன்களை அளிக்க முடியும். மேலும் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடிபணப் பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.

வேளாண் அடுக்கு திட்டத்தில் தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலைதுறை அலுவலகத்தை அணுகி GRAINS வலைதளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயியின் புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story