வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் - உதவி இயக்குனர் சாமுவேல் தகவல்
வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் தெரிவித்துள்ளார்.
வேளாண் அடுக்கு திட்டம்
வேளாண் அடுக்கு திட்டம், தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட தங்கள் கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி, ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று, 'GRAINS' என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யும்போது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரம் அடிப்படையில் 'GRAINS' என்ற இணையத்தில் சேகரிக்கப்பட்டு, வேளாண்மை -உழவர் நலத்துறை பேரிடர் மேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியில் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், விதை சான்றளிப்புத்துறை, வருவாய் துறை மற்றும் சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.
பண பரிமாற்றம்
நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும். வேளாண் அடுக்கு திட்டத்தில் சென்னிமலை மற்றும் ஈரோடு வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி 'GRAINS' வலைதளத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண், விவசாயிகளின் புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மற்றும் சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மா.சாமுவேல் தெரிவித்து உள்ளார்