தீவனபயிர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தீவனபயிர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.
கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தீவனபயிர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீவன அபிவிருத்தி திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் தீவன அபிவிருத்தி திட்டங்களை கால்நடை பராமரிப்புத்துறை இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
10 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், நீர்ப்பாசன வசதி கொண்ட மர பழத்தோட்டங்களில் 0.5 ஏக்கர் முதல் 1 எக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு, குறைந்தபட்சம் 3 ஆண்டு காலம் வரை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு எக்டேருக்கு ரூ.7500-ம் மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முன்னுரிமை
மேலும் இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தீவன விரயத்தை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை அதிகப்படுத்தவும், மின்சாரம் மூலம் இயங்கும் புல் அறுக்கும் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் 10 எண்ணிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் சாகுபடி செய்தல் மற்றும் மின்வசதி உடையவராகவும், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு மானிய திட்டங்களில் பயன் பெற்றவராகவும் இருக்கக்கூடாது.
பங்குத்தொகை
இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யும் பயனாளி 50 சதவீத பங்குத்தொகை செலுத்த வேண்டும். எனவே தகுதிவாய்ந்தவர்கள் தங்கள் கிராமத்திற்கு உட்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கம் பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.