விவசாய கிணற்றின் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 3 ஆண்டு ஜெயில்
விவசாய கிணற்றின் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம்
விவசாய கிணற்றின் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தடை இல்லாத சான்று
ஈரோடு மாவட்டம் நஞ்சை கோபியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் வி.பி.கார்த்திக்கேயன். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு கிணற்று பாசனம் மற்றும் ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலம் அவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த கிணறுகளுக்கான மின் மோட்டார் அவரது தந்தை பழனிச்சாமியின் பெயரில் இருந்தது.
எனவே அதை கார்த்திக்கேயன் தனது பெயருக்கு மாற்றம் செய்ய முயற்சி செய்தார். இதற்காக அவர் கோபி பொதுப்பணித்துறை பாசன பிரிவு அலுவலகத்துக்கு தடை இல்லாத சான்று கேட்டு கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்றார்.
ரூ.15 ஆயிரம் லஞ்சம்
அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் வி.வெங்கடேசன், மஸ்தூர் பணியாளர் சி.ரமேஷ்குமார் ஆகியோர் தடை இல்லாத சான்று அளிக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து கடந்த 13-4-2005 அன்று மாலை 4.40 மணிக்கு பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு சென்ற விவசாயி வி.பி.கார்த்திக்கேயன் மின்சார இணைப்பு பெயர் மாற்றத்துக்காக தடை இல்லாத சான்று பெற அதிகாரிகள் வி.வெங்கடேசன், சி.ரமேஷ்குமார் ஆகியோரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்கினார். அதை அவர்கள் பெற்றுக்கொண்டனர். அப்போது ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையும் பிடித்ததுடன், பணத்தையும் கைப்பற்றினர்.
3 ஆண்டு ஜெயில்
இதுதொடர்பான புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் வெங்கடேசன், ரமேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது ஈரோடு மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட உதவி பொறியாளர் வி.வெங்கடேசன், மஸ்தூர் சி.ரமேஷ்குமார் ஆகியோர் லஞ்சம் கேட்ட குற்றத்துக்காக தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார். அதன்படி 2 பேருக்கும் தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.