ஆங்கில ஆசிரியரை மாற்றக்கோரி வட்டார கல்வி அலுவலகத்தைபெற்றோர்களுடன் மாணவிகள் முற்றுகைபவானி அருகே பரபரப்பு
முற்றுகை
அரசு பள்ளிக்கூட ஆங்கில ஆசிரியரை மாற்றக்கோரி பவானி வட்டார கல்வி அலுவலகத்தை பெற்றோர்களுடன் மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையிட்டு மனு
பவானி பெரியபுலியூர் அருகே சேவாக்கவுண்டனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 89 மாணவர்களும், 122 மாணவிகளும் என மொத்தம் 211 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கூடத்தில் 7 ஆசிரிய-ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக்கூட தலைமை ஆசிரியையாக அனுராதா என்பவர் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் ராஜ் மனோகர் தலைமையில் பள்ளிக்கூட மாணவிகள், அவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெகநாதன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனுவுடன் பவானி வட்டார கல்வி அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்ே்பாது வட்டார கல்வி அலுவலர் கேசவன் இல்லாததால் மேற்பார்வையாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மாற்று ஆசிரியர் நியமனம்
சேவாக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு ஆங்கில வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியை சரியாக பாடம் எடுப்பதில்லை. அடிக்கடி நீண்ட விடுமுறையில் சென்று விடுவதால் மாணவ-மாணவிகளுக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை என பள்ளிக்கூட தலைமை ஆசிரியருக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளி மேலாண்மை குழுவினரும் புகார் அளித்தோம்.
அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு பதிலாக மாற்று ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதனை தொடர்ந்து வட்டார கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்று ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டார். அந்த ஆசிரியர் ஆங்கில வகுப்பு எடுத்து வந்தார்.
நிரந்தர ஆசிரியர் தேவை
இந்த நிலையில் மாற்று ஆசிரியராக நியமிக்கப்பட்டவரும் தற்போது பள்ளிக்கூடத்துக்கு வருவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கூடத்துக்கு மாற்றி விட்டு நிரந்தரமாக ஆங்கில வகுப்பு எடுக்க ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
பின்னர் வட்டார கல்வி அலுவலர் அங்கு மனு கொடுக்க வந்த பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெகநாதனுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அதிகாரி, உரிய முறையில் விசாரணை நடத்தி மாற்று ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்வோம் என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு மாணவிகள், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.