உயிரை பணயம் வைத்து ஓட்டுப்போடும் நிலையை மாற்ற முதுவாக்குடி மலைக்கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்: மறுசீரமைப்பு கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
முதுவாக்குடி மலைக்கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்று மறுசீரமைப்பு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் 1,224 வாக்குச்சாவடிகள் உள்ளன. தற்போது மறுசீரமைப்பு பணியாக, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி காமயகவுண்டன்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வந்த 6 வாக்குச்சாவடிகள் அந்த பள்ளி செயல்படாததால் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அதில் 3 வாக்குச்சாவடிகள் அதே ஊரில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிக்கும், 3 வாக்குச்சாவடிகள் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் கம்பம் தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம், உதவி கல்வி அலுவலர் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளதால் அங்கு இயங்கி வந்த வாக்குச்சாவடி, ஆங்கூர்ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதே பள்ளியில் 7 வாக்குச்சாவடிகளின் பெயரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று உள்ளதை, ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று பெயர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதுவாக்குடி மலைக்கிராமம்
கூட்டத்தின் போது மறுசிரமைப்பு பணிகள் குறித்து அரசியல் கட்சியினர் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் பேசும்போது, போடி அருகே கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட முதுவார்குடி மலைக்கிராமத்தை சேர்ந்த மக்கள் வாக்களிக்க 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் நடந்து செல்ல வேண்டியது உள்ளது.
வன விலங்குகள் நடமாட்டம் உள்ள ஆபத்தான வனப்பகுதி வழியாக குழந்தைகளுடன் உயிரை பணயம் வைத்து வாக்களிக்க செல்லும் நிலைமை உள்ளது. எனவே அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் புதிதாக வாக்குச்சாவடி அமைத்துக் கொடுக்க வேண்டும்" என்றார்.
இதைக்கேட்ட கலெக்டர், மக்களின் நலன் கருதி முதுவாக்குடி மலைக்கிராமத்திலேயே புதிதாக வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தேர்தல் பிரிவு தாசில்தார் ஜலால், பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.