மசினகுடி அருகே நிலத்தடி நீரை பாதுகாக்க ரூ.5 லட்சத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணி-மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் ஆய்வு
மசினகுடி அருகே நிலத்தடி நீரை பாதுகாக்க ரூ.5 லட்சம் செலவில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடலூர்
மசினகுடி அருகே நிலத்தடி நீரை பாதுகாக்க ரூ.5 லட்சம் செலவில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பண்ணை குட்டை
மசினகுடி ஊராட்சி பகுதியில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலத்தில் வறட்சியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர்குறைந்து விவசாயம், கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஊராட்சிக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியில் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் பண்ணை குட்டை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை தமிழக போக்குவரத்து துறை செயலாளரும், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான வெங்கடேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வு
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.8 லட்சம் செலவில் மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி கூட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். பின்னர் மசினகுடியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்கினையும் கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பார்வையிட்டார்.
பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், மசினகுடி ஊராட்சி தலைவர் மாதேவி மோகன், செயலர் கிரண் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.