நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதல் கண்காணிப்பு குழு;போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேட்டி


நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதல் கண்காணிப்பு குழு;போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதல் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என வாராந்திர சிறப்பு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

வாராந்திர சிறப்பு முகாம்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் மனு அளித்து விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்கள் கலந்து கொண்டு மீண்டும் மனு அளிப்பது வழக்கம்.

அதன்படி நேற்று சிறப்பு முகாம் நடந்தது. முகாமை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் 34 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். கேரள மாநிலத்தில் இருந்து கோழி கழிவுகள் குமரி மாவட்டத்தில் கொட்டப்படுவது தொடர்பாக புகார்கள் வருகின்றன. இதனை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் தனிப்படையினர் சாதாரண உடையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் சோதனை சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோழி கழிவுகளை கொட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை பாயும். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லேப் டெக்னீசியன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோல பல மாணவிகளிடமும் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கூடுதல் கண்காணிப்பு குழு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போலீசார் மூலம் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தைரியமாக போலீசில் புகார் அளிக்க முன்வர வேண்டும். இந்த புகார் மீது தனி கவனம் செலுத்தி உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்கள் ஓட்டக்கூடாது. குறிப்பாக பைக்ரேசில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த கூடுதல் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். மாவட்ட போலீசாருடன், பொதுமக்களும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி மூலம் குற்ற சம்பவங்கள் குறையும். குறிப்பாக மக்கள் போலி நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story