'மெட்ராஸ்- ஐ' நோய் பரவலை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும்? கலெக்டர் அரவிந்த் விளக்கம்


மெட்ராஸ்- ஐ நோய் பரவலை கட்டுப்படுத்த  என்னென்ன செய்ய வேண்டும்?  கலெக்டர் அரவிந்த் விளக்கம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

‘மெட்ராஸ்- ஐ’ நோய் பரவலை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

'மெட்ராஸ்- ஐ' நோய் பரவலை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அரவிந்த் விளக்கம் அளித்துள்ளார்.

'மெட்ராஸ் ஐ'

வடகிழக்கு பருவமழையான தற்போது தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 'மெட்ராஸ்- ஐ' நோய் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் உள்ளிட்ட சில இடங்களில் பரவ தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பரவும் விதம்

பருவமழை காலத்தில் நோய் கிருமிகள் அதிக அளவில் பெருகுகிறது. 'மெட்ராஸ் ஐ' கண்வலி என்பது ஜலதோசத்தை உண்டாக்கும் அடினோ வைரஸ் மற்றும் கெர்பஸ் சிம்ளக்ஸ், என்டிரோ வைரஸ் என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகிறது. இது கண்களில் நீர் வடிதலை உருவாக்குகிறது. 50 சதவீத மக்களுக்கு தானாகவே சரியாகி விடும். அதிக பாதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே டாக்டர்களை பார்க்க வேண்டியிருக்கும். இந்த நோய் தாக்கம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து 2 முதல் 15 நாட்கள் வரை நீடிக்க கூடும். இதன் அறிகுறிகள் சிவப்பு நிற கண்கள், கண்களில் நீர் வடிதல், கண்களில் லேசான வீக்கம், எரிச்சல், உறுத்தல் மற்றும் அரிப்பு ஆகும்.

இந்த நோயானது கண்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்ப்பதால் பரவுவதில்லை. நோய் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள் இருக்கும். பாதிப்புக்குள்ளான நபர் கண்களிலிருந்து வடியும் நீரை தன் கைகளால் துடைத்து பின்னர் வேறு பொருட்களை தொடும் போது, அந்த இடத்தை மற்றொருவர் தொடுவதால் நோய் பரவுகிறது.

தடுக்கும் முறைகள்

கைகளை அடிக்கடி சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும். பாதிப்பிற்குள்ளான நபர் தன்னை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். பிறரது பொருட்களை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களை கைகளால் தொடவோ, கசக்கவோ கூடாது.

பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவரை அணுக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story