பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யவேளாண் அலுவலர் வேண்டுகோள்


பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்யவேளாண் அலுவலர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் வட்டார விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய வேளாண் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் வட்டார விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய வேளாண் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உரப்பயிர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேகல் வருவாய் கிராமத்தில் பசுந்தாள் உரப்பயிரான தக்கை பூண்டு 2 ஏக்கர் பரப்பளவில் திருமருகல் வேளாண்துறை ஆலோசனைப்படி இயற்கை விவசாயி இளஞ்செழியன் விதைத்துள்ளார்.

தற்போது மடக்கி உளும் நிலையில் உள்ள பயிரை திருமருகல் வட்டார வேளாண் அலுவலர் செந்தில்வாசன் மற்றும் வேளாண் உதவி அலுவலர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது வேளாண் அலுவலர் செந்தில்வாசன் தெரிவித்தாவது:-

ரசாயன உரத்தேவை குறைகிறது

இனிவரும் காலங்களில் விவசாயிகள் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு மண் வளத்தை மேம்படுத்தவும், உரசெலவை குறைக்கவும், தழைச்சத்தை நிலைப்படுத்தவும், கரிம அளவை மண்ணில் நிலை நிறுத்துதல் அவசியம். தொடர்ந்து தழை, எருக்களை நிலத்தில் இடுவதால், மண்ணில் கரிமம் நிலைபெறும்.

மண்ணில் சேரும் கரிமப் பொருள்களால் மண் புழுக்களின் வளர்ச்சியும், தழைச்சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். நுண்ணூட்ட சத்துக்களும் உள்ளன. பசுந்தாள்களை மண்ணில் இட்ட பின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் வெகுவாக அதிகரிக்கிறது. இதுதவிர அடுத்து விளைவிக்கும் பயிர்களுக்கான ரசாயன உரத்தேவையும் குறைகிறது.

மானிய விலையில்...

பசுந்தாள் பயிர்களை நிலங்களில் விதைத்த 30 முதல் 45 நாட்களுக்குள் நிலத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும். அதாவது, பசுந்தாள் பயிர்களின் பூக்கும் பருவத்துக்கு முன்பாக இதனை மடக்கி உழ வேண்டும். தக்கை பூண்டு விதைகள் வேளாண்துறை அலுவலகம் மூலம் ஏக்கருக்கு 20 கிலோ விகிதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

அதனை அனைத்து விவசாயிகள் பெற்று பயன்பெறுமாறும், அதிகமாக மகசூல் பெரும்படியும் தெரிவித்தார். மேலும் திருமருகல் வட்டார அனைத்து வேளாண் விரிவாக்கம் மையங்களிலும் சம்பா பருவத்திற்கு தேவையான விதை நெல் ஆடுதுறை 51 இருப்பு உள்ளது. தேவையான விவசாயிகள் மானிய விலையில் பெற்று பயன்பெறுமாறும் தெரிவித்தார்.


Next Story