ஊராட்சிகளில் அடிப்படை பணிகள் செய்ய ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.
ரூ.5.20 கோடி ஒதுக்கீடு
திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், அதன் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு செய்ய வேண்டிய பணிகள், குறைகள் குறித்து பேசினர்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
என்.கே.ஆர் சூர்யகுமார் தலைவர்:- மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களது ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொள்ள மத்திய 15-வது நிதி குழு மூலம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.15 லட்சம், மாநில 15-வது நிதி குழு மூலம் தலா ரூ.25 லட்சம் என ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.40 லட்சம் என ரூ.5 கோடியே 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு என்ன தேவை என்பதை எழுதிக்கொடுத்தால் உடனடியாக பணிகள் செய்ய உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.
அடிப்படை வசதிகள்
கூட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டிற்கு ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய், பேவர் பிளாக், சிமெண்டு சாலை அமைத்தல், பள்ளி கட்டிடம் பழுதுபார்த்தல் மற்றும் சமையல் அறை கட்டிடம் பழுதுபார்த்தல், சின்ன வேப்பம்பட்டு, மல்லபள்ளி, பாச்சல், பகுதியில் கால்வாய் அமைத்தல், சின்ன மூக்கனூர், புத்தகரம் பணியாண்ட பள்ளி, கொடுமாம்பள்ளி, புதூர் நாடு, லக்கிநாயக்கன்பட்டி, பள்ளத்தூர், பெரியகண்ணாலபட்டி, ஆகிய பகுதிகளில் பள்ளி கட்டிடம் ரூ.21 லட்சத்து 45 ஆயிரத்தில் பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் அலுவலக உதவியாளர் சரவணன் நன்றி கூறினார்.