ஈரோடு பஸ்-ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைதுதிருப்பூரில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்


ஈரோடு பஸ்-ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைதுதிருப்பூரில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
x

திருப்பூரில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்

ஈரோடு

ஈரோடு பஸ், ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் திருப்பூரில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை ஒரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஈரோடு பஸ் நிலையம், ஈரோடு ரெயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறிவிட்டு தொலைபேசியின் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் ஈரோட்டில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். உடனடியாக அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளுக்கு சோதனை நடத்த விரைந்தனர். அதுமட்டுமின்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்களும் உஷாராகி ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனையை தீவிரப்படுத்தினர்.

தீவிர சோதனை

ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் சோதனையிடப்பட்டது. அப்போது கேட்பாரற்று ஏதாவது பொருட்கள் கிடக்கிறதா? என்று போலீசார் தேடி பார்த்தனர். மேலும் மோப்ப நாய் கயல் வரவழைக்கப்பட்டது. பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் இருந்த பைகள் மற்றும் பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய் கயல் மோப்பம் பிடித்தது. அதுமட்டுமின்றி வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை பயன்படுத்தி ஒவ்வொரு பகுதியாக சென்று சோதனை நடத்தினார்கள். பயணிகள் இருக்கைகள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம், குப்பை தொட்டிகள் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி, டிக்கெட் முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், பயணிகள் தங்கும் அறைகள், லிப்ட்கள் என ஒரு இடம் விடாமல் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. நடைமேடை முழுவதும் போலீசார் ரோந்து சென்று பார்வையிட்டனர். மேலும், ரெயில்களில் இருந்து நடைமேடையில் இறக்கி வைக்கப்பட்ட பார்சல்களிலும், ரெயில்களில் ஏற்றுவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த பொருட்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டரை வைத்து சோதனையிட்டனர். நுழைவு வாயிலில் உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பிறகே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இந்த சோதனையில் சந்தேகத்துக்கு இடமான எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது.

திருப்பூரில் கைது

இதற்கிடையே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் அவர் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்றிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சந்தோஷ்குமாரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை ஈரோடு டவுன் போலீசாரிடம் திருப்பூர் போலீசார் ஒப்படைத்தனர். சந்தோஷ்குமார் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 3 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Next Story