ஈரோடு மார்க்கெட்டுக்குமீன்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடு உயர்வு


ஈரோடு மார்க்கெட்டுக்குமீன்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடு உயர்வு
x

ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்தது.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்து விலை கிடுகிடுவென உயர்ந்தது.

மீன்பிடி தடைகாலம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் மீன் பிடி தடைக்காலம் விதிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் முதல் ஜூன் மாதம் 16-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது.

இதன் காரணமாக ஈரோட்டில் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு வரும் கடல் மீன்களின் வரத்து நேற்று குறைந்தது. பொதுவாக 30 டன் மீன்கள் விற்பனைக்கு வரும் நிலையில் நேற்று வெறும் 9 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.750-க்கு விற்பனையான ஒரு கிலோ வஞ்சரம் மீன், நேற்று மேலும் ரூ.250 விலை உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் அனைத்து மீன்களின் விலையும் ரூ.100 முதல் ரூ.250 வரை விலை உயர்ந்து விற்பனையானது.

விலை அதிகரிப்பு

இதுகுறித்து ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு மீன் மார்க்கெட்டுகளுக்கு தூத்துக்குடி, நாகை, கடலூர், ராமேசுவரம் மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் என்பதால், வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அதனால், வெளிமாநிலத்தில் இருந்து கடல் மீன்கள் வரத்தாகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து மத்தி மீன்கள் மட்டுமே வருகிறது. மீன்பிடி தடைக்காலம் நீங்கும் வரை மீன்களின் விலை அதிகரித்தே காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

அயிலை -ரூ.250, மத்தி -ரூ.200, கொடுவா -ரூ.350, விளாமீன் -ரூ.450, பாறை -ரூ.450, முரல் -ரூ.300, நீல நிற நண்டு -ரூ.600, பொட்டு நண்டு -ரூ.400, இறால் -ரூ.700, சீலா -ரூ.450, திருக்கை -ரூ.350, வெள்ளை வவ்வால் -ரூ.900, கருப்பு வவ்வால் -ரூ.700.


Next Story