"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அரசாக தி.மு.க. இருக்கிறது": ஜி.கே.வாசன் பேட்டி


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற  தவறிய அரசாக தி.மு.க. இருக்கிறது:  ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:39+05:30)

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அரசாக தி.மு.க. இருக்கிறது”: ஜி.கே.வாசன் பேட்டி

தூத்துக்குடி

கோவில்பட்டி:

"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அரசாக தி.மு.க. இருக்கிறது" என்று ஜி.கே.வாசன் கூறினார்.

ஜி.கே.வாசன் பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறார்கள். அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.

இந்துக்கள் பற்றி ஆ.ராசா பேசியது ஏற்புடையது அல்ல என்பதில் மாற்று கருத்து கிடையாது. தமிழகத்தில் தி.மு.க. வாக்குறுதிகள் மூலம் வென்ற அரசு. ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அரசாக இருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றும் அரசுதான் இங்கு உள்ளது.

போதைப் பொருள்

பொதுவாக தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது நாடாளுமன்ற தேர்தலில் எதிர்மறை விளைவை தரும். எங்களை போன்ற எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்.

ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை கட்சிக்கு பயன் அளிக்குமே தவிர, நாட்டுக்கு எந்த பயனும் அளிக்காது.

தமிழகம் இன்றைக்கு போதைப் பொருள் விற்பனையில் தலைநிமிர்ந்த மாநிலமாக இருக்கிறது என்பது வேதனையான உள்ளது. போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டியது அரசின் கடமை. மிகப்பெரிய சூதாட்டமாக இருக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரவேற்பு

முன்னதாக ஜி.கே.வாசனுக்கு நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் பெ.கதிர்வேல், தெற்கு மாவட்ட தலைவர் விஜயசீலன், நெல்லை மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், கிழக்கு மாவட்ட தலைவர் மாரித்துரை, மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகநேரி தங்கமணி, நகரச் செயலாளர்கள் மூர்த்தி, செண்பகராஜ், வட்டார தலைவர் ஆழ்வார் சாமி, இளைஞர் அணி மாநில செயலாளர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஜி.கே.வாசன் புதுக்கிராமத்தில் உள்ள மூத்த உறுப்பினரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ரஜாக் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் திருமுருகன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.


Next Story