மாநில கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பான இடத்தை பெற்றுத்தர வேண்டும்


மாநில கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பான இடத்தை பெற்றுத்தர வேண்டும்
x

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வேலூர் மாவட்ட மாணவர்கள் சிறப்பான இடத்தை பெற்றுதர வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

வேலூர்

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வேலூர் மாவட்ட மாணவர்கள் சிறப்பான இடத்தை பெற்றுதர வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

மாவட்ட கலைத்திருவிழா

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடந்தது.

இதில் கவின்கலை, நுண்கலை, மொழித்திறன், நாடகம், இசை, வாய்ப்பாட்டு, தோல்கருவி காற்று கருவி, தந்தி கருவிகள், இசை சங்கமும், நடனம் உள்பட 15 வகையான தலைப்புகளில் 83 வகையான போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 4,500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சிறப்பான இடம்

தமிழகம் அனைத்து வகையிலும் கல்வியிலும் முதல் இடத்தில் உள்ளது. நீங்கள் கல்வியில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது. கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் கல்வியில் வேலூர் மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.

இந்த கல்வயாண்டில் கல்வியில் வேலூர் மாவட்டம் முன்னுக்கு வர வேண்டும். மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு வேலூர் மாவட்டத்திற்கு சிறப்பான இடத்தை பெற்று தர வேண்டும். அதேபோல அரசு தேர்வுகளிலும் நன்றாக படித்து நல்ல முறையில் தேர்வு எழுதி சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும்.

இ்வ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், மாநகராட்சி கவுன்சிலர் அன்பு ஆகியோர் பேசினர்.

250 மாணவர்கள்

மாநிலப்போட்டிக்கு 250 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், தலைமை ஆசிரியர்கள் ஜோதீஸ்வரபிள்ளை, சிவ வடிவு, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், மாநகராட்சி கவுன்சிலர்கள் விமலா சீனிவாசன், சித்ரா லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story