புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பக்தர்களுக்கு வழங்க கோட்டை பெருமாள் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பக்தர்களுக்கு வழங்க கோட்டை பெருமாள் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக கோட்டை பெருமாள் கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தது.
புரட்டாசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை ஆகும். இதையொட்டி ஈரோடு மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள கோட்டை பெருமாள் (கஸ்தூரி அரங்கநாதர்) கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
லட்டு தயாரிக்கும் பணி
ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பெருமாளை தரிசனம் செய்ய வருவார்கள். சாமி தரிசனம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்படும். இதற்காக நேற்று கோட்டை பெருமாள் கோவில் வளாகத்தில் பெருமாள் பக்தர்கள் குழு சார்பில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தது.
20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும் கோவிலில் அலங்காரம் செய்வதற்காக 300 கிலோ செவ்வந்தி பூ வாங்கப்பட்டு அதை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தொடுத்தனர்.