விவசாய நிலங்களை எடுப்பதை அரசு கைவிட வேண்டும்


விவசாய நிலங்களை எடுப்பதை அரசு கைவிட வேண்டும்
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் உத்தனப்பள்ளியில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றாா. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையை பிடித்து கொண்டு நிலத்தை, வளத்தை அரசுகள் நாசமாக்கி வருகின்றன. ரேஷனில் இலவசமாக அரிசி போட்டால் தான் வாங்கி சாப்பிட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரிசியும், வெல்லமும் கொடுத்தால் தான் பண்டிகை கொண்ட முடியும் என்ற நிலையில் மக்களை வைத்து விட்டு, வளர்ச்சி, வளர்ச்சி என பேசுவது எவ்வளவு பெரிய மோசமான வார்த்தை.

நிலத்தை பறிக்கின்றனர்

அன்னூரில் 3 ஆயிரம் ஏக்கர், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை எடுக்கிறார்கள். ஆந்திர முதலாளி வாங்கி வைத்துள்ள 5 ஆயிரம் ஏக்கரில் சிப்காட்டை தொடங்குங்கள். கேட்பதற்கு ஆளில்லை என்பதால் உழைக்கும் மக்களின் நிலங்களை எடுக்கிறார்கள்.

தமிழ்நாடு மட்டும் தான் தேசிய இனம், உரிமை, மாநில தன்னாட்சி பற்றி பேசுகிறது. இந்தி, நீட், ஜி.எஸ்.டி., போன்றவற்றை எதிர்க்கிறது. அதனால் தான் தமிழர்களை நிலமற்ற கூலியாக்கி என் நாடு, என் இனம் என பேச விடாமல் செய்ய நிலத்தை பறிக்கின்றனர். நடுத்தெருவில் நிற்க வைப்பதற்கு பெயர் தான் நல்லாட்சியா?. மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் விளைநிலங்களின் வளமே மிகவும் குறைவாக உள்ளது.

கைவிட வேண்டும்

வெங்காயம், பருப்பை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த நேரத்தில் விளை நிலங்களை பறித்து கொண்டால் எங்கே போவது. அந்த ஒன்று தான் எங்களுக்கு தற்சார்பு. அதை பறித்து கையேந்த வைப்பது தான் இந்த ஆட்சியின் சாதனையா?. விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம், அரசு துறைகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் இந்த சட்டம் உள்ளது. அதை தமிழகத்தில் கடைபிடிக்க வேண்டும். வேலைவாய்ப்பு வழங்குவது வெற்று அறிக்கையாக இருக்க கூடாது. 80 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்போம் என்பது செயலாக்கம் பெற வேண்டும். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் குவாரிகளே அமைக்க கூடாது. மலை இல்லாவிட்டால் நாடு பாலைவனமாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story