அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டினார்.
மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று கிடைத்ததற்கு கல்லூரி முதல்வர், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சமூகத்தின் நம்பிக்கை
என்.ஏ.பி.எச். என்பது இந்தியத் தர கவுன்சிலின் ஒரு குழுவாகும். இது சுகாதார நிறுவனங்களுக்கான அங்கீகாரத் திட்டத்தை நிறுவவும், செயல்படுத்தவும் அமைக்கப்பட்டது. இது இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கான முதன்மை அங்கீகாரமாகும். இது சுகாதார அமைப்பு வழங்கும் சான்றிதழ் சமூகத்தின் நம்பிக்கையை உயர்த்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இந்த விருதுகளை பல கட்ட ஆய்வுகளுக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உன்னத சேவைக்கு கிடைத்த ஒரு சான்றிதழ் என்பது போற்றுதற்குரியது. இந்த தரச்சான்றிதழ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ், இணை இயக்குனர் (மருத்துவபணிகள்) பிரகலாதன், துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலெட்சுமி, ரெனி மோள், ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் அகமது உள்பட மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.