தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம நபர்கள் அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம நபர்கள் அனுப்பிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அதிர்ச்சி கடிதம்

நாகர்கோவில் தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு நேற்று காலையில் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பிரித்து பார்த்த அதிகாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து எழுதப்பட்டு இருந்தது.

அதாவது தமிழில் எழுதப்பட்ட அந்த கடிதம் ஒரு அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் எழுதப்பட்டு இருந்த வாசகங்கள் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்துக்கு 11-10-2023 (அதாவது இன்று) காலையில் வரும் பார்சலில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்.

சிதறப்போகிறது

அது வெடித்து உங்களுடைய அலுவலகம் சிதறி சின்னாபின்னமாக போகிறது. எனவே தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளவும். இந்த தகவலை நீங்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும் கவலை இல்லை.

இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் கடித்தத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதைப்படித்துப் பார்த்த அதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடமும், பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்களிடையேயும் கசியத் தொடங்கியது. உடனே பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். ஊழியர்கள் பதற்றத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

வெடிகுண்டு சிக்கவில்லை

இதையடுத்து உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் தலைமை தபால் நிலைய முதுநிலை தபால் அதிகாரி செல்வராஜன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் வடசேரி போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் 7 பேரும் தலைமை தபால் நிலையத்துக்கு வந்து சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் தாங்கள் அழைத்து வந்த மோப்ப நாய் மூலம் தபால் நிலையத்துக்கு வந்த பார்சல்கள் அனைத்தையும் மோப்பம் பிடிக்கச் செய்து வெடிகுண்டு சோதனை நடத்தினர். அனைத்து அலுவலக பிரிவுகளிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

திக்... திக்... மனநிலை

கடிதத்தில் இன்று வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் தபால் நிலையத்துக்கு வெளியூர்களில் இருந்து வரும் பார்சல்களை சோதனை செய்வதற்காக இன்று காலையில் வருவதாக போலீசார் கூறிச்சென்றனர். ஆனாலும் தலைமை தபால் நிலைய ஊழியர்கள் திக்... திக்... மனநிலையோடுதான் பணியாற்றினர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தபால்துறை சார்பில் தேசிய தபால் வாரவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் தபால்துறை ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story