சங்க தேர்தலை நடத்தக்கோரி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 226 பேர் கைது - கோபி, சத்தியமங்கலத்தில் 104 பேர் தடுத்து நிறுத்தம்
சங்க தேர்தலை நடத்தக்கோரி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 226 பேர் கைது
சத்தியமங்கலத்தில் மலர் விவசாயிகள் சங்க தேர்தலை நடத்தக்கோரி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 226 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கோபி, சத்தியமங்கலத்தில் 104 விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
தேர்தல் நடத்த கோரிக்கை
சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்கத்துக்கு மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்த கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் வாகனங்களில் ஈரோடு நோக்கி வந்தனர். பின்னர் அவர்கள் சம்பத்நகர் கொங்கு கலையரங்கம் முன்பு ஒன்று திரண்டனர். அங்கிருந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் செல்ல அவர்கள் திட்டமிட்டனர்.
226 பேர் கைது
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை அவர்களிடம் தெரிவித்தனர். எனினும் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு செல்ல முயன்றதுடன், கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு-பெருந்துறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மொத்தம் 226 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் ஈரோடு சங்குநகர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மோசடி
இதுகுறித்து மலர் விவசாயிகள் கூறும்போது, 'கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கத்தின் சொத்துகளை, 32 பேர் மட்டும் சேர்ந்து கொண்டு, சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை புதிதாக தொடங்கி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்கத்தில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும். மேலும் சங்கத்தில் நடைபெற்ற ஊழல், மோசடி குறித்து ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
கோபியில் 78 பேர் கைது
இதேபோல் சத்தியமங்கலம், கொண்டப்பநாய்க்கன்பாளையம், இண்டியம்பாளையம், கொத்துக்காடு, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் 78 பேர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பஸ்சில் நேற்று ஈரோடு புறப்பட்டனர்.
கோபி பஸ்நிலையம் முன்பு வந்தபோது போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையிலான போலீசார் அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி, உள்ளே இருந்த 64 பெண்கள் உள்பட 78 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இவர்களும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் பகுதியில் இருந்து விவசாயிகள் வாகனத்தில் வந்தபோது சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே 21 பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.