பூ மார்க்கெட் சாலையை மேம்படுத்த வேண்டும்; மேயரிடம் மனு


பூ மார்க்கெட் சாலையை மேம்படுத்த வேண்டும்; மேயரிடம் மனு
x

நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மனு கொடுக்கப்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றுக்கு தீர்வு காண உத்தரவிட்டனர்.

பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் மணிகண்ட மகாதேவன் தலைமையில் குன்னத்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் முத்துபாண்டி, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதி தேர்வுக்குழு உறுப்பினர் கிருஷ்ணா, குற்றவியல் ஆராய்ச்சியாளர் ராகுல் ஆகியோர் வந்து மேயரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ''நெல்லை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவு செய்து, சான்று பெறும் நடைமுறையை ஒழுங்குப்படுத்த வேண்டும். இதற்குரிய ஊழியர்கள் மெத்தனமாக செயல்பட்டு பொதுமக்களை அலைக்கழித்து வருகிறார்கள். எனவே பிறப்பு, இறப்பு பதிவு செய்வதை விரைவுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

பூ மார்க்கெட் சாலை

நெல்லை மாவட்ட மொத்த பூ கமிஷன் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சட்டநாதன், பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், துணை செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், நாறும்பூநாதன், செப்பறை பரமசிவன், ஆலோசகர் எல்.ஐ.சி. பேச்சிமுத்து ஆகியோர் கொடுத்த மனுவில், 'நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து கெட்வெல் பூ மார்க்கெட் வழியாக அரவிந்த் கண் ஆஸ்பத்தி பஸ்நிறுத்தம் வரை சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனங்களிலும் சென்று வருகின்றனர். ஆனால் இந்த சாலையில் மின்விளக்கு இல்லை. ேமலும் மேடும் பள்ளமுமாக மண் சாலையாக உள்ளது. இந்த சாலையை மாநகராட்சி கைவசம் எடுத்து சிமெண்டு சாலையாக மாற்றி மேம்படுத்த வேண்டும். மேலும் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.

மகாராஜநகர் கவுன்சிலர் சீதாபாலன் கொடுத்த மனுவில், 'பாளையங்கோட்டை மகாராஜநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஆதரவற்றோரை தங்கவைத்து பராமரித்து வருகிறார்கள். அவர்களை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிக்கு மாற்றிவிட்டு, திருமண மண்டபத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்' என்று கூறிஉள்ளார்.

இதேபோல் மாநகர பகுதியை சேர்ந்த பல்வேறு பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், கஜிதா இக்லாம் பாசிலா, உதவி ஆணையாளர்கள் அய்யப்பன், ஜஹாங்கீர், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story