மதுரை-தூத்துக்குடிக்குமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் சிக்கினர்
மதுரை-தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி வந்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனிப்படை
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி வந்து தூத்துக்குடி பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மதுரையிலிருந்து கடத்தல்
இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்த கந்தசிவா (வயது 20), மட்டக்கடையை சேர்ந்த தாமஸ் மகன் நிர்மல்ராஜ் (28) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் கஞ்சாவை, மதுரையில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 2 பேரையும் பிடித்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா, ரூ.20 ஆயிரத்து 700 ரொக்கப்பணம், ஒரு மோட்டார் சைக்கிள், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களையும் பறிமுதல் செய்த கஞ்சா உள்ளிட்ட பொருட்களையும் வடபாகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2பேர் கைது
இதை தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். பிடிபட்ட கந்தசிவா மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.