கடன் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு


கடன் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
x

கடன் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தை வளர்ச்சிபெற்ற மாவட்டமாக மாற்ற வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

கடன் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தை வளர்ச்சிபெற்ற மாவட்டமாக மாற்ற வங்கிகள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

வங்கிகள் ஆய்வு குழுகூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கிகளின் மாவட்ட அளவிலான ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

இலக்கை தாண்டி சாதனை

தேசிய மயமாக்கப்பட்ட, தனியார், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி வணிக பொறுப்பாளர்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு நிதிச்சேவை அளித்துவருகிறது. விவசாயம், சுயத்தொழில் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு தேவையான குறுகிய மற்றும் நீண்ட கால கடன்களை வங்கிகள் அளிப்பதன் மூலம் வாழ்வாதாரம் மேம்பாடு அடைகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2 வருடம் முடிவடைந்துள்ள நிலையில் கடன் வைப்பு விகிதம் 81 சதவீதத்திலிருந்து 136.57 சதவீதமாக உயர்ந்திருப்பது நிதி சேவைகள் விரிவடைத்துள்ளதை காட்டுகிறது. அதேபோல் சென்ற ஆண்டின் கடன் இலக்கான ரூ.4214.91 கோடியை தாண்டி ரூ.4372.03 கோடி கடன் வழங்கப்பட்டு சாதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டின் கடன் இலக்கான ரூ.4627.12 கோடியில் முதல் காலாண்டு வரை ரூ.1181.57 கோடிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றாவது காலாண்டில் கடன் இலக்கை தாண்டி சாதனை செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சிறப்பு கவனம்

சுயஉதவிக்குழு கடனாக இதுவரை ரூ.124.61 கோடி வழங்கப்பட்டடுள்ளது. நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை விரைந்து தீர்வு செய்யவேண்டும். கடன் கேட்டு வருபவர்களை அலைகழிக்காமல் கடன்கள் தர முயற்சிக்க வேண்டும். விவசாய கடன்கள், ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன்கள், சுயத்தொழில் கடன்கள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற்றிட வங்கியாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் 155 பயனாளிகளுக்கு ரூ.7.4 கோடி அரசு பரிந்துரைத்துள்ள கடன் திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் மற்றும் அனைத்து வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story