குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்குஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை


குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்குஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.

ஜனாதிபதி வருகை

கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று (சனிக்கிழமை) காலை புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரும் அவர், மதியம் 12:15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன் பின்னர், தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து கோவைக்கு மதியம் 3.10 மணிக்கு வருகிறார்.

அங்கு ஈஷா மையத்தில் மாலை 6 மணி முதல் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதன் பின்னர் விழா முடிந்து மீண்டும் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி

இதைத் தொடர்ந்து மறுநாள் காலை 9 மணி அளவில் புறப்பட்டு கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயற்சி கல்லூரிக்கு 9.45 மணிக்கு வருகிறார். அப்போது ராணுவ பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

இதைத் தொடர்ந்து ராணுவ பயிற்சி அதிகாரிகள் மத்தியில் அவர் பேசுகிறார். இதன் பின்னர் மதியம் 12 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவைக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு செல்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் நீலகிரிக்கு முதல்முறையாக வருவது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் ஒத்திகை

இந்த நிலையில் ஜனாதிபதி வருகையையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஜிம்கானா மற்றும் ஊட்டியில் உள்ள தீட்டுக்கள் மைதானத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நேற்று மதியம் குன்னூர் கரும்பாலம், ஜிம்கானா பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் வளாகம் முழுவதும் ராணுவ கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் வெளி மாவட்டத்தில் இருந்து நேற்று 200 போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் முதல் ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் மாவட்ட எல்லை பகுதிகளிலும் வாகன சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தேவைப்படும் இடங்களில் புதிதாக சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story