மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க கடலூர் மாவட்ட அளவில் ஜூடோ வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க கடலூர் மாவட்ட அளவில் ஜூடோ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனா்.
பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினத்தையொட்டி மாநில அளவிலான ஜூடோ போட்டி காஞ்சீபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடலூர் மாவட்ட அளவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜ சோழன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டி 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்ஷா, ராஜாராம், கார்த்திக், ராஜசேகர், பயிற்சியாளர் கனகராஜ், ஜூடோ மாவட்ட தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.