குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து தூங்குபவர்களின் கைரேகை பதிவு
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து தூங்குபவர்களின் கைரேகையை போலீசார் பதிவு செய்தனர்.
குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து தூங்குபவர்களின் கைரேகையை போலீசார் பதிவு செய்தனர்.
குற்ற சம்பவங்கள்
ஈரோடு ரெயில் நிலையத்தில் நடைமேடை பகுதியில் தினமும் ஏராளமானோர் இரவில் படுத்து தூங்குவது வழக்கம். இதில் சிலர் இறந்து விட்டால் அவர்களை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் அங்கு சென்று படுத்து தூங்குவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று இரவில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் ஈரோடு ரெயில் நிலையம் சென்று, அங்கு படுத்து தூங்கி கொண்டு இருந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர்.
30 பேர்
அப்போது அவர்களின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்களும் அவர்களின் கை ரேகைகளும் சேகரிக்கப்பட்டன. 30-க்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் நேற்று ஒரே நாளில் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் பகல் நேரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வருபவர்களும், வீடு இல்லாதவர்களும் இரவில் ரெயில் நிலையம் சென்று அங்கு நடைமேடை பகுதியில் படுத்து தூங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்கள் இறந்து விட்டால் அவர்களை அடையாளம் காணுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கவும் இது உதவியாக இருக்கும். இதுபோன்று தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.