குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு


குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 5:30 PM IST)
t-max-icont-min-icon

குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

சமூக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மாவட்ட போலீஸ்துறை சார்பில் சமூக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசுகையில்,

குற்றமில்லாத மாவட்டமாக மாற்ற...

தூத்துக்குடி மாவட்டத்தை குற்றம்மில்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளின் சிறு தவறுகளை உடனுக்குடன் கண்டித்து வளருங்கள். அப்போதுதான் குழந்தைகள் வருங்காலங்களில் நல்லவர்களாக உயர முடியும். கோபத்தினால் குற்ற செயலில் ஈடுபட்டு சிறை செல்பவனை விட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் ஆவான். கோபப்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவன் அவனது எதிர்காலத்தை இழப்பதோடு அவனது குடும்பமும் பாதிப்படையும். அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை வளர்க்க கற்று கொடுங்கள். இளைஞர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் எவ்வித சூழ்நிலையிலும் கல்வி பயில செய்யுங்கள். கல்வி ஒன்று தான் அவர்களுக்கு பெற்றோர்கள் அளிக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.

கண்காணிப்பு கேமரா

ஜாதி வேறுபாடுகளை களைந்து அனைவருடனும் ஒற்றுமையாக வாழ்ந்து இந்த சமுதாயத்தை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யுங்கள். அந்த கேமராக்கள் குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவுவதோடு, குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். மாணவ மாணவியரிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள் முற்றிலும் தவிற்க வேண்டும். மேலும் மாணவர்கள் ஜாதி ரீதியான கயிர்களை கைகளில்கட்டுவதை பெற்றோர்கள் அனுமதிக்ககூடாது, என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்தகூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர்அன்னராஜ், ஸ்ரீவைகுண்டம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா உள்ளிட்ட போலீசார் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவக்குமார், மற்றும் அனைத்துகட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story